Sunday, 16 December 2012

Pallikondeeswarar temple,suruttapalli,pic 26--30





பள்ளிகொண்டீஸ்வர தரிசனம்::  

சிவ பெருமான் சயன கோலத்தில் இருக்கும் பள்ளிகொண்டேஸ்வரரின் கருவறை அமைப்பு வித்தியாசமானது. ஆலகால விஷத்தை உண்டு அசதியில் உறங்கும் பரமேஸ்வரனையும், அவருடைய தலைமாட்டில் வீற்றிருக்கும் பரமேஸ்வரியான சர்வமங்களாம்பிகையும் தரிசிக்கலாம்.

அவர்களை சூழ்ந்து நின்றிருக்கும் சந்திரன், சூரியன், நாரதர், தும்புரு, குபேரன், பிரம்மா, விஷ்ணு மற்றும் சப்த ரிஷிகளையும் கண்டு வணங்கும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்காது பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும். நீண்ட செவ்வக வடிவில் அமைந்திருக்கும் மூலக்கருவறையில் தெற்கே தலை வைத்து மல்லாந்த வண்ணம் நெடுந்துயில் கொண்டிருக்கிறார் பள்ளிகொண்டீஸ்வரர்.

இரண்டரை உயர பீடத்தில் பதினாறு அடி நீளத்திற்கு படுத்த வண்ணம் ஈசுவரர் காட்சி அளிக்கிறார். ஈசனின் தலைமாட்டில் அன்னை சர்வமங்களாம்பிகை புன்னகை பூத்தபடி வீற்றிருக்கிறாள். அன்னையின் குளிர்ந்த திருவடி ஈசனின் திருமேனியை சற்றே தொடுகிற மாதிரி அம்பாள் வீற்றிருக்கிறாள். இப்பொழுது தான் அன்னைக்கு பரம திருப்தி.

ஏனென்றால், உயிர்கள் எல்லாம் அயர்ந்து உறங்குகின்ற வேளையில், உலகம் முழுவதும் ஒழுங்காக இயங்க சதாசர்வ காலமும் நடனமாடிக்கொண்டு இருந்தவருக்கு சற்ற ஓய்வு கிடைத்ததே என மகிழ்ந்தாள். பள்ளி கொண்டீஸ்வரரை வணங்கும் போது, அவன் திருவடி தரிசனத்தை மனத்தின் உள்ளே நிறுத்தி வைத்து தியானிக்க வேண்டும். அவனை உட்கொள்ள வேண்டும்.

அப்பொழுது தான் பலன் கிடைக்கும். இந்த ஒரே எண்ணத்தோடு பள்ளி கொண்டீஸ்வர பெருமானின் திருவடி தாமரைகளை போற்றி பணிந்து வணங்கி, அவன் திருமுக தரிசனத்தை நம்முள் வாங்கிக்கொள்ள வேண்டும். நெடுஞ்சாண் கிடையாக படுத்திருக்கும் மூலவருக்கு சாம்பிராணி தைலக்காப்பு மட்டும் தான் உண்டு.

மற்ற அபிஷேகங்கள் கிடையாது. இந்த சன்னதிக்குள் இன்னொரு விசேஷம் உண்டு. சிவன் என்பதால் வழக்கமான விபூதிப் பிரசாதம் இங்கே கிடைக்காது. மாறாக பெருமாள் சன்னதியை போல தீர்த்த பிரசாதமும், தலையில் சடாரி வைத்த ஆசீர்வாதமும் தான்.

பெருமாளின் திருவடி நிலைக்கு தான் சடாரி என்று சொல்லுவார்கள். அந்த பெருமானே நம் தலையில் திருவடி வைத்து ஆசீர்வாதம் செய்வதாக ஐதீகம்.

No comments:

Post a Comment