திருமுல்லை வாயில் மாசிலாமணி ஈஸ்வரர்
கோவில்,சென்னை
திருமுல்லைவாயில்
திருக்கோயில் மிகப் பழமையானது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின்
பதிகம் பெற்ற திருத்தலம். 10-ம் நூற்றாண்டு முதல் 15 -ம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள்
இக்கோயிலில் காணப்படுகின்றன. இத்தலத்து இறைவன் புகழை
அருணகிரிநாதர், மாதவச் சிவஞான யோகிகள், வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், இரட்டைப் புலவர் முதலியோர் பாடியுள்ளனர். இத்தலத்தைப் பற்றி புலவர் மயிலை சண்முகம் பிள்ளை புராண
காவியம் இயற்றியுள்ளார்.
தல வரலாறு: காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த தொண்டை
நாட்டின் அரசன் தொண்டைமான் ஒரு முறை திக்விஜயம் மேற் கொண்ட போது, எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்ட
புழல்கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்த ஓணன், காந்தன் என்னும் அசுரர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான்.
(இந்த ஓணன், காந்தன் ஆகிய இவர்களே
காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றவர்கள். அவர்கள்
பூஜித்த திருக்கோவிலே திருஓணகாந்தன்தளி ஆகும்). போரில் தோல்வியுற்ற தொண்டைமான் தனது யானையின் மீது
மிகவும் மனம் நொந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது யானையின் கால்களை முல்லைக்
கொடிகள் சுற்றிக் கொண்டன. யானை முன்னேறிச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால்
தொண்டைமான் தனது வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி
ஏற்படுத்தினான். அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழே இருந்து இரத்தம்
வருவதைக் கண்டான். யானையிலிருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கிப்
பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான். இறைவனை வணங்கி தான்
செய்த தவறை பொருத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டினான்.
இறைவன் அவன்முன் தோன்றி அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத்
துணையாக நந்தியம்பெருமானையும் போருக்கு அனுப்பினார். அரசன் குறும்பர்களுடன்
மறுபடியும் போர் செய்து அதில் அவர்களை வெற்றி கொண்டான். தனக்கு உதவி செய்த
இறைவனின் கருணையைப் பொற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினான்.
குறும்பர்களை வென்று அவர்கள் கோட்டையிலிருந்து கொண்டுவந்த இரண்டு வெள்ளெருக்கு
தூண்களை தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான்.
அதுவே இந்த மாசிலாமனி ஈஸ்வரர் ஆலயம் என்று தல வரலாறு கூறுகிறது. மூலவர் கருவறை
முன்பு அந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை இன்றும் காணலாம்.
தெற்கில் உள்ள இராஜ கோபுரம் இவ்வாலயத்தின் பிரதான நுழைவு
வாயிலாகும். கிழக்கு திசையில் ஒரு நுழைவாயில் இருந்தும் அது உபயோகத்தில் இல்லை.
தெற்கு கோபுரத்திற்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து
உள்ளே சென்றவுடன் பிரசன்ன கணபதி நம்மை வரவேற்கிறார். அவருக்குப் பின்னால்
மதில்மீது தல வரலாற்றுச் சிற்பம் - யானைமீதிருந்து மன்னன் முல்லைக்கொடியை
வெட்டுவது சிவலிங்கம் - தன் கழுத்தை அரிவது - காட்சி தருவது ஆகியவை சுதையால்
அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மற்றொரு நுழைவு வாயில் வழியாக
உள்ளே சென்றால் முதலில் இறைவி கொடியிடை நாயகி சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது.
அதைக் கடந்து மேலும் சென்றால் இறைவன் மாசிலாமணி ஈஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி
உள்ளது. இறைவன் மற்றும் இறைவி சந்நிதி இரண்டும் கிழக்கு நோக்கி இருப்பதும், இறைவி கொடியிடை நாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு
வலப்புறம் இருப்பதும் இக்கோவிலின் ஒரு சிறப்பம்சமாகும். சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட
அமைப்புடையது.
கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயரமான
லிங்கம். சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. ஆதலால்
அபிஷேகங்கள் சிரசில் கிடையாது. ஆவுடையாருக்குத் தான். வாளால் வெட்டுப்பட்டதால்
மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி
தருகிறார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும்
பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும்.
தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில் நந்தி
சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது. இறைவன் கருவறை
சுற்றுப் பிரகாரத்தில் மேற்குச் சுற்றில் நாலவர் திரு உருவங்கள் உள்ளன. மேலும்
மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாக காட்சி
அளிக்கின்றன. கருவறையின் வடக்குச் சுற்றில் நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.
சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன.
பக்கத்தில் பிற்காலப் பிரதிஷ்டையான ரச லிங்கம் (பாதரசம் வெள்ளி இவற்றின்
கலப்பினால் ஆனது) உள்ளது. இத்தலத்து இறைவி கொடியிடை அம்மனை பௌர்ணமி நாளில் மாலை
வேளையில் வழிபடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு
திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தனி
சந்நிதியில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இத்தல முருகப் பெருமானை
அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன்
மீது மூன்று பாடல்கள் உள்ளன. கிழக்கு வெளிப் பிரகாரத்தில் பைரவர் தனி சந்நிதியில்
தெற்கு நோக்கி காணப்படுகிறார். இக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி
கிடையாது. வசிஷ்ட முனிவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு
காமதேனுவை பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை - பொன்னேரி பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள
மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை, சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை, இத்தலத்து கொடியிடை அம்மை - ஆகிய மூன்று திருவுருவங்களும்
ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை. வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில்
இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் முறையே காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் தரிசித்தல் பெருஞ் சிறப்பு என்றும்
சொல்லப்படுகிறது.
ஆலய தீர்த்தமான கல்யாண தீர்த்தம் கோவிலுக்க் வெளியே தெற்கு
கோபுரத்திறகு வலதுபுறம் அமைந்துள்ளது. இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல்
12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30
மணி வரையும் திறந்திருக்கும்
சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில் பாதையில் உள்ள
திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 Km தொலைவில் இந்த சிவஸ்தலம்
அமைந்துள்ளது. சென்னை நகரின் ஒரு பகுதியான அம்பத்தூரில் இருந்து சுமார் 3 Km தொலைவில் கோவில் உள்ளது. சென்னையில்
இருந்து திருமுல்லைவாயிலுக்கு நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
No comments:
Post a Comment