சென்னையை அடுத்த திருவான்மியூரில் அமைந்துள்ளது புகழ் பெற்ற மருந்தீஸ்வரர் ஆலயம். அதிகாலையிலேயே பெண்கள் தலைமுழுகி நீராடி விட்டு பக்தியோடு
ஆலயத்திற்கு வரும் அதிசயத்தை இங்கு காணலாம். கி.பி.ஏழாம் நூற்றாண்டில்
கட்டப்பட்டு, சோழ மன்னர்களால்
திருப்பணி செய்யப்பட்டது இந்த கோவில்.
"எல்லா மருந்துகளுக்கும்
மேற்பட்ட மருந்து, மருந்தீஸ்வரரின் திருநீறு. எல்லா மருத்துவர்களுக்கும் மேற்பட்ட மருத்துவர் மருந்தீசர். மருந்தீஸ்வரரை நம்பிக்கையோடு வழிபட்டால் நிறைவேறாத காரியமே இல்லை' என்பது இங்கு வரும் பக்தர்களின்
அசைக்க முடியாத நம்பிக்கை
மந்த மாகிய சிந்தை
மயக்கறுத்து அந்த மில்குணத்து ஆனை யடைந்துநின்று எந்தை ஈசனென் ஏத்திட வல்லீரேல்
வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே.
------திருநாவுக்கரசர்
(தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 25வது தலம்)
.
தன்னை வணங்கி திருந்திய வால்மீகிக்கு, சிவன் வன்னி மரத்தினடியில் காட்சி தந்தார். அப்போது, வால்மீகி இறைவனிடம் வேண்டியதற்கேற்ப அவரது பெயரிலேயே இத்தலம் விளங்குகிறது.
பிரகாரத்தில்
அகத்தியர், வால்மீகிக்கு சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது.
இவ்விடத்தில் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது, அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. நடராஜர், அருணகிரியாரால் பாடல் பெற்ற முத்துக்குமரர், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்சலிங்கங்கள் தனித்தனி சன்னதியில் உள்ளன. தினசரி அதிகாலையில் கோபூஜை செய்யப்பட்ட பின்பே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.
சுவாமிக்கு
வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் என்ற பெயர்களும் உள்ளது. அகத்தியருக்கு உபதேசம்: அகத்திய
முனிவர் இங்கு வந்து சுவாமியை வணங்கி தவம் செய்தார். அவருக்கு, வன்னி மரத்தடியில்
காட்சி தந்த சிவன் உலகில் தோன்றியுள்ள நோய்களுக்கு உண்டான மருந்துகளைக்குறித்தும், மூலிகைகளின் தன்மைகள் குறித்தும் உபதேசம் செய்தார். எனவே, இத்தலத்து ஈசன் "மருந்தீஸ்வரர்' எனப்படுகிறார்.
மேற்கு திரும்பிய சிவன்: அபயதீட்சிதர் எனும் பக்தர்
ஒருவர், சுவாமியை வழிபட வந்தபோது கடும்மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, அவரால் நீரைக்கடந்து சுவாமியைக்காண வரமுடியவில்லை. அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால் சுவாமியின் முதுகுப்பகுதியை
மட்டும்தான் தரிசிக்க முடிந்தது. வருத்தம்கொண்ட
அவர், "சிவனே! உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள மாட்டாயோ?' என வேண்டினார். அவருக்காக சிவன் மேற்கே திரும்பி காட்சி தந்தார். இதனால், இங்கு சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள், சுவாமிக்கு
பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு
நோக்கியும் காட்சி தருகின்றனர்.
வால்மீகி முனிவருக்கு ஈசன் காட்சி தந்த தலம்
இதுவென்பதால் வான்மீகியூர் என்று வழங்கப்பெற்று, தற்போது திருவான்மியூர்
என்று அழைக்கப்படுகிறது
No comments:
Post a Comment